அன்னியச்செலாவணி மோசடி வழக்கு: இன்று சென்னையில் ஆஜராகவிருந்த சுதாகரன் வருகை ரத்து

அன்னியச்செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறையில் உள்ள சுதாகரன் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், பாதுகாப்பு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்னியச்செலாவணி மோசடி வழக்கு: இன்று சென்னையில் ஆஜராகவிருந்த சுதாகரன் வருகை ரத்து
Published on

சென்னை:

அன்னியச்செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறையில் உள்ள சுதாகரன் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், பாதுகாப்பு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், சசிகலா, டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், சுதாகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த அன்னிய செலாவணி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது, பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் நடத்திய சூப்பர் டூப்பர் டி.வி. நிறுவனத்துக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

சுதாகரன், பாஸ்கரன் மீதான அன்னிய செலாவணி வழக்குகளை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மலர்விழி கடந்த மாதம் 10-ந்தேதி விசாரித்தார். அப்போது நீதிபதி, ‘சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன், கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சிறை மாற்று வாரண்டு அடிப்படையில், கோர்ட்டில் ஆஜர்படுத்த ஏற்கனவே நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

இந்த உத்தரவின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடகா கோர்ட்டில் உள்ள சுதாகரனை, கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அந்த மாநில சிறை துறைக்கு இந்த கோர்ட்டு நேரடியாக உத்தரவிட முடியாது என்பதால் தான், இந்த உத்தரவை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்தேன்” என தெரிவித்தார்.

அப்போது அமலாக்கப்பிரிவு வக்கீல் தண்டபாணி, சுதாகரனை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

சுதாகரன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க போதிய போலீசார் இல்லை எனக் கூறி அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதாகவும், மாநிலத்தின் பல பகுதிகளில் திருவிழாக்கள் நடைபெறுவதாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சனை இருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழக போலீசாரும் சுதாகரனுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்துவிட்டதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com