திண்டுக்கல் பஸ்நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டத்தை காணலாம்.
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டத்தை காணலாம்.

ஐப்பசி மாத முதல் முகூர்த்தநாள்- திருமணங்கள் களைகட்டியதால் பஸ்களில் அலைமோதிய கூட்டம்

ஐப்பசி மாத முதல் முகூர்த்தநாளில் திருமணங்கள் களைகட்டியதால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
Published on

திண்டுக்கல்:

கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்களாக திருமண விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படவில்லை. அனைத்து திருமணங்களும், ஒருசில உறவினர்களின் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றன. இதற்கிடையே கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், புரட்டாசி மாதம் தொடங்கி விட்டது. இந்த மாதத்தில் திருமண விழாக்களை நடத்துவதற்கு பலரும் விரும்புவதில்லை.

இந்த நிலையில் புரட்டாசி மாதம் நிறைவுபெற்று நேற்று முன்தினம் ஜப்பசி மாதம் பிறந்தது. இதையடுத்து நேற்று முதல் முகூர்த்தநாள் ஆகும். இதனால் கொரோனா ஊரடங்கு, புரட்டாசி மாதம் ஆகியவை காரணமாக தள்ளிப்போன திருமணங்கள் நேற்று நடத்தப்பட்டன. இதில் கோவில்கள், வீடுகள் மட்டுமின்றி திருமண மண்டபங்களிலும் திருமண விழாக்கள் நடந்தன.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான திருமண மண்டபங்கள், திருமண வீட்டாரால் களைகட்டியது. மேலும் திருமண மண்டபங்கள் இருக்கும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த திருமண விழாக்களில் கலந்து கொள்வதற்காக மக்கள் திரண்டு வந்தனர். இதன் காரணமாக திண்டுக்கல்லில் நேற்று பெரும்பாலான பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக ஏராளமானோர் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது. இதில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிந்து இருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் அறிவுரையை அனைவரும் காற்றில் பறக்க விட்டது, வேதனை அளித்தது. மேலும் பஸ்நிலையம் மட்டுமின்றி பஸ்களிலும் மக்கள் நெருக்கமாக நின்றது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்போரும் உண்டு. இதனால் புரட்டாசி மாதத்தில் மீன், இறைச்சி விற்பனை மந்தமாக இருந்தது. இந்த நிலையில் ஐப்பசி மாதம் தொடங்கி விட்டதால் பலர் விரதத்தை முடித்து கொண்டு, அசைவ உணவுகளின் பக்கம் திரும்பி விட்டனர். இதனால் திண்டுக்கல்லில் நேற்று பிரியாணி ஓட்டல் உள்பட அனைத்து அசைவ உணவகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com