

ராயபுரம்:
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதில் இருதய சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாடியில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க 6 பேர் நேற்று இரவு லிப்டில் பயணம் செய்தனர். அப்போது முதல் மாடிக்கு செல்லும் வழியில் லிப்ட் பழுதாகி நின்று விட்டது. இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு லிப்ட் மீண்டும் இயங்கியது.
அதன் பின்னர் லிப்ட்டில் சிக்கி தவித்தவர்கள் வெளியேறி நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த ஆஸ்பத்திரியில் இது போன்று லிப்ட் அடிக்கடி பழுதாகிறது.
ஊழியர்கள் சரிவர பராமரிக்காததால் தான் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. எனவே லிப்டை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.