அண்ணா அன்று செய்த அதிசயத்தை ஸ்டாலின் இன்று செய்துள்ளார் - வைரவிழா கூட்டத்தில் துரைமுருகன் புகழாரம்

அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து அண்ணா அன்று செய்ததைபோல மு.க.ஸ்டாலின் இன்று செய்துள்ளார் என கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
அண்ணா அன்று செய்த அதிசயத்தை ஸ்டாலின் இன்று செய்துள்ளார் - வைரவிழா கூட்டத்தில் துரைமுருகன் புகழாரம்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும், சட்டமன்றத்தில் அவர் 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதால் சட்டமன்ற வைர விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டபேரவை வைர விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், கனிமொழி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்- மந்திரி உமர் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் 

டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் வரவேற்று பேசியதாவது ,’காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி தொடங்கி ஐந்தாவது தலைமுறையாக ராகுல் காந்தி இங்கே வந்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திலிருந்து முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வந்துள்ளார். அவரது தாத்தா சேக் அப்துல்லா இமயம் என்றால், கருணாநிதி குமரி, இருவர்களும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தனர். 

1968-ம் ஆண்டில் அண்ணா, அப்போதைய இடதுசாரி தலைவர்களையும் தேசிய கட்சித்தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்தார். அதேபோல், இன்று மு.க.ஸ்டாலின் எதிரும், புதிருமாக இருக்கும் இடதுசாரிகளையும், திரினாமுல் காங்கி்ரஸ் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்துள்ளார். அன்று அண்ணா செய்த அதிசயத்தை, ஸ்டாலின் இன்று செய்துள்ளார். ராஜதந்திரம் கொண்ட ஸ்டாலின் கட்சியை திறம்பட வழிநடத்துவார்’ என பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com