மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை விவரத்தை வெளியில் தெரிவிக்க மாட்டோம் - ஸ்ரீபிரியா

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை, வாக்கு ஆகியவை ரகசியம். இதை வெளியில் தெரிவிக்க மாட்டோம் என்று நடிகை ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை விவரத்தை வெளியில் தெரிவிக்க மாட்டோம் - ஸ்ரீபிரியா
Published on

தஞ்சாவூர்:

மக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் தரும.சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீப்ரியா கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் சவுந்திரராஜன், சிவா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் அடிக்கடி எங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக எங்களுடைய கருத்துக்கள் அடங்கிய வீடியோ பதிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் செல்வாக்கில் தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் கூட பிரதமரை சந்திக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி சந்திக்க முடியும்?. வீடியோவை பார்த்துவிட்டு பிரதமர் எங்களை அழைப்பார் என்று நம்புகிறோம். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி குறித்து பேசினோம்.

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்துதான் முழுமையாக பேசப்பட்டது. காவிரி தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த தீர்ப்பிற்கு பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்ற வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தினோம். இதன் மூலம் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர். அடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை, வாக்கு ஆகியவை ரகசியம். இதை வெளியில் தெரிவிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com