சென்னையில் பத்மாவத் படம் வெளியான தியேட்டர் முன்பு போராட்டம்

பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படம் வெளியான தியேட்டர் முன்பு ஸ்ரீராம்சேனா மற்றும் இந்து யுவ வாஹினி ஆகிய 2 அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் பத்மாவத் படம் வெளியான தியேட்டர் முன்பு போராட்டம்
Published on

சென்னை:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘பத்மாவத்’.

குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தீவைப்பு, தியேட்டர்கள் சூறை, வாகனங்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிர்ப்பு இருப்பதால், சென்னையில் இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலை சத்யம் தியேட்டர் முன்பு ஸ்ரீராம்சேனா மற்றும் இந்து யுவ வாஹினி ஆகிய 2 அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சத்யம் தியேட்டர் முன்பு உள்ள சாலை போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சங்கம், அபிராமி உள்ளிட்ட தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

சென்னையில் நேற்று சில தியேட்டர்களில் இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த சிறப்பு காட்சிகள் மூலம் ரூ.24 லட்சம் வசூல் ஆகி இருக்கிறது. ‘பத்மாவத்’ படத்துக்கு வரவேற்பு இருப்பதால் தமிழ்நாட்டில் இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பட வினியோகஸ்தர் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ‘பத்மாவத்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இது 3டி, 2டி, ஐனாக்ஸ் 3டி என்ற மூன்று தொழில் நுட்பத்தில் வெளியாகி இருக்கிறது.

பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்த படத்தை 3டி, ஐநாக்ஸ் 3டி தொழில் நுட்பத்தில் பார்க்கும்போது பிரமிக்கும் வகையில் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு வெளியாகி இருக்கும் ‘பத்மாவத்’படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com