வங்காள தேசத்திற்கு எதிராக 194 ரன்னை 16.4 ஓவரில் சேஸிங் செய்தது இலங்கை

டாக்காவில் நடைபெற்ற வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 16.4 ஓவரில் 193 ரன்களை சேஸிங் செய்து இலங்கை அணி வெற்றி பெற்றது. #BANvSL
27 பந்தில் 53 ரன்கள் சேர்த்த குசால் மெண்டிஸ்
27 பந்தில் 53 ரன்கள் சேர்த்த குசால் மெண்டிஸ்
Published on

வங்காள தேசத்தின் ஜகிர் ஹசன், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜகிர் ஹசன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் அவுட்டாகும்போது வங்காள தேசம் 4 ஓவரில் 49 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது விக்கெட்டுக்கு சவுமியா சர்கார் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 6.1 ஓவரில் 51 ரன்கள் சேர்த்தது. சவுமியா சர்கார் 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் சேர்த்தார்.


32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்த சவுமியா சர்கார்

அடுத்து வந்த அபிஃப் ஹொசைன் 0 ரன்னிலும் வெளியேற, 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் மெஹ்துல்லா ஜோடி சேர்ந்தார். முஷ்பிகுர் ரஹிம் அரைசதம் அடிக்க, மெஹ்முதுல்லா 31 பந்தில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 1 ரன்னில் ஆட்டமிழக்க, முஷ்பிகுர் ரஹிம் 44 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 66 ரன்கள் சேர்க்க வங்காள தேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குசால் மெண்டிஸ், குணதிலகா ஆகியோர் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். குணதிலகா 15 பந்தில் 30 ரன்களும், குசால் மெண்டிஸ் 27 பந்தில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் 42 பந்தில் 83 ரன்கள் குவித்தனர்.

அதன்பின் வந்த தரங்கா 4 ரன்னிலும், டிக்வெல்லா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் 5-வது விக்கெட்டுக்கு ஷனகாவுடன் திசாரா பெரேரா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இலங்கை சேஸிங்கை நோக்கிச் சென்றது. இலங்கையின் ஸ்கோர் சராசரியாக ஓவருக்கு 10 ரன்னுக்கு மேல் இருந்து கொண்டே வந்தது.


24 பந்தில் 42 ரன்கள் எடுத்த ஷனகா

இலங்கை அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. இலங்கைக்கு கடைசி 5 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 27 ரன்னை 1.4 ஓவரில் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. தசுன் ஷனகா 24 பந்தில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 42 ரன்களுடனும், பெரேரா 18 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com