பா.ஜ.க.கெடுவுக்கு மத்தியில் சபாநாயகர் வைத்திலிங்கம் அமெரிக்கா பயணம்

பா.ஜனதா கெடுவுக்கு மத்தியில் சபாநாயகர் வைத்திலிங்கம் திடீரென அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு மாதத்திற்கு மேல் தங்கும் திட்டத்துடன் அவர் சென்றிருக்கிறார்.
பா.ஜ.க.கெடுவுக்கு மத்தியில் சபாநாயகர் வைத்திலிங்கம் அமெரிக்கா பயணம்
Published on

புதுச்சேரி:

புதுவை அரசின் சிபாரிசு இல்லாமலேயே மத்திய அரசு பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவி பிரமாணம் செய்துவைக்க மறுத்தார். இதனால் கவர்னர் கிரண்பேடியே அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆனால் இந்த பதவி பிரமாணம் செல்லாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார். 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு இருக்கை மற்றும் அலுவலகம் ஒதுக்கும்படி சட்டசபை செயலகத்தில் மனு கொடுத்தனர். அவர்கள் 3 பேருக்கும் இன்னும் அங்கீகாரம் இல்லாததால் இருக்கை மற்றும் அலுவலகம் ஒதுக்க முடியாது என்று சட்டசபை செயலகம் பதில் கடிதம் அனுப்பியது.

இதனால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் முறைப்படி எம்.எல்.ஏ.வாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் உடனடியாக இருக்கை, அலுவலகம் ஒதுக்காவிட்டால் இந்த ஆட்சியே இருக்காது என்று பாரதீய ஜனதா மிரட்டல் விடுக்கும் வகையில் கூறியது. அதற்கு 15 நாட்கள் கெடுவும் விதித்தது.

இந்த நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கம் திடீரென அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவரது மகன் இருக்கிறார். ஒரு மாதத்திற்கு மேல் தங்கும் திட்டத்துடன் அவர் சென்றிருக்கிறார். அவர் வரும் வரை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது.

இதனால் பாரதீய ஜனதா விதித்த கெடு என்ன ஆக போகிறது என்று தெரியவில்லை. நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பணியை செய்ய முடியாமல் தவித்தபடி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com