

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் (57), ஹசிம் அம்லா (56) அரைசதம் அடித்து அவுட்டானார்கள். அதன்பின் வந்த முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும், அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி வில்லியர்ஸ் அரைசதம் அடிக்க நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும், பிலாண்டர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 300-ஐ தாண்டியது. அணியின் ஸ்கோர் 311 ரன்னாக இருக்கும்போது பிலாண்டர் 36 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 8-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 84 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது.
அடுத்து மகாராஜ் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய டி வில்லியர்ஸ் 109-வது ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 22-வது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சதம் அடித்திருந்தார். அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் சதம் அடித்துள்ளார்.
36 ரன்கள் அடித்த பிலாண்டர்
மகாராஜ் அதிரடியாக விளையாடி 24 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் அடித்தார். டி வில்லியர்ஸ் - மகாராஜ் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் குவித்தது. அடுத்து நிகிடி 5 ரன்னில் ரன்அவுட் ஆக தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 118.4 ஓவரில் 382 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டி வில்லியர்ஸ் 126 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 139 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய சாதகமாகும்.ஷ