கேப் டவுன் டெஸ்டில் 322 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா

கேப் டவுனில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 322 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி அபாரமாக வெற்றி பெற்றது. #AUSvSA #SAvAUS #CapeTownTest
கேப் டவுன் டெஸ்டில் 322 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா
Published on

கேப் டவுன்:

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் கடைசி வரை களத்தில் நின்று 141 ரன்கள் அடித்தார். டி வில்லியர்ஸ் 64 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, மோர்கல் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சால் 69.5 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா 255 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் பான்கிராப்ட் 77 ரன்னும், நாதன் லயன் 47 ரன்னும் எடுத்தனர். ரபாடா, மோர்கல் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்ற தென்ஆப்பிரிக்கா, 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மார்கிராம் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்க்க, தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 51 ரன்னுடனும், டி காக் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டி வில்லியர்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டி காக் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். பிலாண்டர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் டி காக் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய டி காக் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ரபாடா 20 ரன்கள் எடுத்த நிலையிலும், மகாராஜ் 5 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் பிலாண்டர் அரைசதம் அடித்தார். கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய மோர்கல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 373 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பிலாண்டர் 52 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து தென்ஆப்பிரிக்கா 429 ரன்கள் முன்னிலைப்  பெற்றுள்ளன. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 430 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள தென்ஆப்பிரிக்கா. 430 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கெமரான் பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடினர். பான்கிராப்ட் 26 ரன்களிலும், வார்னர், 32 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் வந்தவர்கள் தென்ஆப்ரிக்கா அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிச்செல் மார்ஷ் 16 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்ஆப்ரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் மார்னே மார்கல் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்ரிக்கா அணி 2-1 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. #AUSvSA #SAvAUS #CapeTownTest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com