ஏரியில் மணல் அள்ள பள்ளம் தோண்டியபோது மண்ணில் புதைந்து வாலிபர் பலி

நெமிலி அருகே ஏரியில் மணல் திருடுவதற்காக பள்ளம் தோண்டிய வாலிபர், மண்ணில் புதைந்து பலியானார்.
மண்ணில் புதைந்த வாலிபர் உடலை மீட்ட காட்சி.
மண்ணில் புதைந்த வாலிபர் உடலை மீட்ட காட்சி.
Published on

அரக்கோணம்:

வேலூர் மாவட்டம் வாலாஜா அனந்தலை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 18). இவரது நண்பர்கள், அதே பகுதியை சேர்ந்த சாமியப்பன் (22), மாணிக்கம் (18), பரத்குமார் (20) மற்றும் அகவலம் மோட்டூரை சேர்ந்த கருணாகரன் (22).

இவர்கள் 5 பேரும், அரக்கோணம் அடுத்த நெமிலி மேட்டு வேட்டாங்குளத்தில் உள்ள ஒரு ஏரியில் மணல் திருடுவதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் பைக்குகளில் சென்றனர். பைக்குகளை ஏரிக்கு அருகே விட்டுவிட்டு, 5 பேரும் மண் வெட்டியுடன் ஏரிக்குள் சென்றனர்.

ஏற்கனவே, அந்த ஏரியில் பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்களால் மண் திருடப்பட்டுள்ளதால், பெரிய, பெரிய பள்ளங்கள் இருந்தன. ஒரு பெரிய பள்ளத்திற்குள் வேல்முருகன் மண் வெட்டியுடன் உள்ளே குதித்தார்.

அவரது நண்பர்கள் 4 பேரும், பள்ளத்திற்கு மேலே நின்றிருந்தனர். வேல்முருகன், பள்ளத்தை சுற்றிலும் இருந்த களிமண்ணை வெட்டி அகற்றி விட்டு, பக்கவாட்டில் மணல் இருக்கிறதா? என்று தோண்டி பார்த்தார். மணல் கிடைக்காததால், மேலும் பக்கவாட்டிலேயே தோண்டி கொண்டே சென்றார்.

அப்போது, மண் சரிந்தது. பள்ளத்திற்குள் இருந்த வேல் முருகன் மீது மண் சரிந்து விழுந்தது. அவர் மேலே ஏறுவதற்கு முயற்சி செய்தார். அதற்குள் மண் முழுவதுமாக சரிந்து வேல் முருகன் மண்ணுக்குள் புதைந்து போனார்.

மேலே நின்றிருந்த அவரது நண்பர்கள் 4 பேரும் அபயக்குரல் எழுப்பினர். மண்ணை அகற்றி வேல் முருகனை காப்பாற்ற முயற்சி செய்தனர். மண்ணை அகற்ற முடியாததால் நெமிலி போலீஸ் நிலையத்துக்கு ஓடி சென்றனர். போலீசாரிடம் நடந்ததை கூறினர்.

3 பேரை மட்டும் போலீஸ் நிலையத்திற்குள் பிடித்து வைத்த போலீசார், கருணாகரனை மட்டும் ஏரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அகற்றி வேல்முருகனை பிணமாக மீட்டனர்.

அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், மண்ணில் புதைந்து பலியான வேல் முருகனின் நண்பர்கள் 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com