தமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைவு - தலைவர்கள் மரியாதை

தமிழகத்தில் கடைசியாக முடி சூட்டப்பட்ட, சிங்கம்பட்டி குறுநில மன்னர், முருகதாஸ் தீர்த்தபதி முதுமை காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி
சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி
Published on

நெல்லை மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் புகழ்பெற்று விளங்கிய சமஸ்தானமாக செயல்பட்டு வந்தது.

இந்த சமஸ்தானத்தின் ராஜாவாக சுதந்திரத்திற்கு முன்பு தனது 3½ வயதில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவாக பொறுப்பேற்றார்.

சுதந்திரத்திற்கு பிறகு 1952-ம் ஆண்டு ஜமீன் சமஸ்தானம் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் முருகதாஸ் தீர்த்தபதி தமிழகத்தின் கடைசி ராஜா என்ற மதிப்புடன் வசித்து வந்தார். ஆண்டுதோறும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் விழாவின் போது இவர் ராஜா வேடமணிந்து காட்சியளிப்பார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 320 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் தற்போது ஒரு கிராமமாக உள்ளது. அந்த காலத்தில் அரண்மனையாக இருந்த மாளிகையில் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். சிங்கம்பட்டி ஜமீனில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்பட 8 கோவில்களுக்கு தற்போதும் பரம்பரை அறங்காவலராக செயல்பட்டு வந்தார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இப்போதும் அவரை ராஜா என்று பெருமிதத்துடனே அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் முதுமை காரணமாக கடைசி ராஜாவான முருகதாஸ் தீர்த்தபதி நேற்று இரவு 9.30 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 89. அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்களும், தலைவர்களும், பொது மக்களும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் கடைசியாக முடி சூட்டப்பட்ட, சிங்கம்பட்டி குறுநில மன்னர், நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி, நேற்று இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு ஒரு பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஜமீன் குடிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து தாமிரபரணி நதிக்கரையில் இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில்  தீர்த்தபதியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com