திருச்சி அரசு ஆஸ்பத்திரி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ பிரிவு மூடல்

மாவட்ட சித்த மருத்துவ அலுவலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ பிரிவு மூடப்பட்டது.
Published on

திருச்சி:

திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட சித்தா பிரிவு செயல்படுகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு சித்த மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. கடந்த 6 மாத காலத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையிலான சித்த மருத்துவர்கள் லட்சக்கணக்கானோருக்கு கொரோனாவில் இருந்து மீள்வதற்கான மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக கபசுர குடிநீர், நில வேம்பு, தாளிச்சதி, திரிகடுகு, அமுக்கரா சூரணங்கள், சாந்த சந்திரோதய மாத்திரை, மகா சுதர்சன மற்றும் பிரம்மா கந்த பைரவ காய்ச்சல் மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் சூரணம் பொட்டலமிட்டு பொது மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அரசு துறை பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி தவிர பிற மாவட்டங்களில் கொரோனா சித்தா பிரிவு மருத்துவமனைகளும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு அங்கு கொரோனா நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை சித்த மருத்துவப்பிரிவில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி கூட இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அனைத்து மாவட்ட பகுதிகளிலும் உள்ள சித்த மருத்துவமனைகள் மற்றும் திருச்சியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகளில் தொடர்ந்து இரு மாதங்களாக தினசரி ஆய்வு செய்து மருந்துகள் வழங்க மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் நடவடிக்கை எடுத்து வந்தார்.

தொடர் பணி காரணமாக அவருக்கு அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. முறையாக சித்த மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அடுத்த சில நாட்களில் மேற்கொண்ட ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் அவருக்கு கொரோனா உறுதியாகவில்லை.

ஆனால் அவருடன் பணியாற்றிய சித்தா பிரிவு பணியாளர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மூடப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து சிறிது நாள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்றும் சித்தா பிரிவில் பணியாற்றும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com