மண்டியாவில் குமாரசாமி மகனின் வெற்றிக்கு பாடுபடுங்கள்: சித்தராமையா வேண்டுகோள்

மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி மகனின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என்று வீடியோ மூலம் காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். #Siddaramaiah #MandyaConstituency #NikhilKumaraswamy
மண்டியாவில் குமாரசாமி மகனின் வெற்றிக்கு பாடுபடுங்கள்: சித்தராமையா வேண்டுகோள்
Published on

பெங்களூரு :

பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், அவரை எதிர்த்து நடிகை சுமலதா சுயேச்சையாகவும் போட்டியிடுகிறார்கள். சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு வழங்கியுள்ளது. அந்த தொகுதியில் அவர்கள் இருவர் இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக தோதல் பணியாற்ற முடியாது என்று காங்கிரசார் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து சித்தராமையா பேசினார். ஆயினும் அவர்கள் குமாரசாமி மகனின் வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற முடியாது என்று கூறிவிட்டனர்.

இந்த நிலையில் சித்த ராமையா வீடியோ மூலம் மண்டியா காங்கிரசாருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில், “காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது வெற்றிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பாடுபட வேண்டும். அவருக்கு ஆசி வழங்க வேண்டும்.

நானும், தேவேகவுடாவும் வருகிற 12-ந் தேதி கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளோம்” என்று பேசியுள்ளார்.

மேலும் முதல்-மந்திரி குமாரசாமியும் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையா பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார். #Siddaramaiah #MandyaConstituency #NikhilKumaraswamy 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com