

மும்பை:
இலங்கையில் சமீபத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்ததை தொடர்ந்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பொது இடங்களுக்கு பெண்கள் யாராக இருந்தாலும் தங்கள் முகத்தை துணியால் மூடியபடி அணிந்து வரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்தியாவிலும் பெண்கள் துணியால் முகத்தை மூட தடை விதிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராவணனின் இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ராமனின் அயோத்தியிலும் இந்த ஆபத்து உள்ளது.
பிரதமர் மோடி இன்று அயோத்தி செல்கிறார். இந்த நேரத்தில் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்ப சிவசேனா விரும்புகிறது.
பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெண்கள் தங்கள் முகத்தை துணியால் மூடிய படி வெளியில் வருவது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கையிலும் தற்கொலை தாக்குதல் நடந்து இருப்பதால் அந்த நாட்டு அரசும் பெண்கள் துணியால் முகத்தை மூட தடை விதித்துள்ளது. இந்தியாவும் பயங்கரவாத ஆபத்தை கருத்தில் கொண்டு இலங்கை ஜனாதிபதி சிறிசேனா முடிவை பின்பற்றி பெண்கள் துணியால் முகத்தை மூட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவசேனாவின் இந்த கோரிக்கைக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
முகத்தை துணியால் மூடும் அனைத்து இஸ்லாமிய பெண்களையும் பயங்கரவாதிகள் என்று ஒட்டு மொத்தமாக முத்திரை குத்தி விட முடியாது. அப்படி சொல்வது சரியானது அல்ல.
முகத்தை துணியால் மூடி தவறு செய்யும் பெண்களை தண்டிக்க வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் முகத்தை துணியால் மூடுவதை முஸ்லிம் பெண்கள் பாரம்பரிய பழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ShivSena #pmmodi #srilankablast