

காத்மாண்டு:
நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு உதவி செய்து வழிகாட்டிகளாக இருப்பவர்கள் ஷெர்பாக்கள். மலைவாழ் சமூகத்தினரான இந்த ஷெர்பாக்களின் உதவியுடன்தான் பெரும்பாலான வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தை அடைகிறார்கள். ஷெர்பாக்களும், மலையேற்றத்தில் சாதனை படைத்துள்ளனர். எனவே, அவர்களுக்கும் மலையேற்ற சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், அரசாங்கத்திடம் பதிவு செய்து ராயல்டி செலுத்தி அனுமதி பெறும் உறுப்பினர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற விதிமுறையை காரணம் காட்டி, கடந்த ஒரு வருடமாக இந்த சான்றிதழ்கள் வழங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து ஷெர்பா மலையேற்ற வீரர்கள் சார்பில் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் விமான போக்குவரத்து துறை மற்றும் நேபாள மலையேற்ற சங்கத்திற்கு கோரிக்கை மனு அனுப்பினர். எனினும், அவர்களின் கோரிக்கை குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.
இதையடுத்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அடிவார முகாமில் நூற்றுக்கணக்கான ஷெர்பாக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறிய ஷெர்பாக்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனா.
ஷெர்பாக்களுக்கு சான்றிதழ் வழங்கும் வகையில், விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவதற்கு சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்கும் என துறையின் டைரக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.