அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவி செயலாளராக இந்திய வழக்கறிஞர் மனிஷா சிங் நியமனம்

அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மனிஷா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவி செயலாளராக இந்திய வழக்கறிஞர் மனிஷா சிங் நியமனம்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க வெளியுறவுத்துறையின் பொருளாதாரம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு உதவி செயலாளர் வசம் உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிக்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனை வழங்குவதும், வெளிநாடுகளுடனான பொருளாதார கொள்கைகளை தீர்மானிப்பதும் அவரது முக்கிய வேலைகளாகும். இந்த பதவியில் சார்லஸ் ரிக்வின் இருந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், ராஜினாமா செய்தார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தது. 

இந்நிலையில், காலியாக உள்ள வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மனிஷா சிங் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை அமெரிக்க  செனட் சபை உறுதி செய்துள்ளது. அவர் இதுவரை செனட் சபை உறுப்பினர்  டான் சுல்லிவானின் தலைமை ஆலோசகர் மற்றும் மூத்த கொள்கை ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

புளோரிடாவில் வசித்து வரும் மனிஷா சிங், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவர் சிறு வயதில் இருந்த பொழுதே குடும்பத்துடன் புளோரிடாவில் குடியேறிவிட்டனர். வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்துக்குட்பட்ட  சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். மேலும் மியாமி பல்கலைகழகம் மற்றும் புளோரிடா சட்டக்கல்லூரியிலும் சட்ட மேல்படிப்பு பயின்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com