தினகரன் அணிக்கு ஒரு போதும் நான் செல்ல மாட்டேன்: செம்மலை எம்.எல்.ஏ.பேட்டி

தினகரன் அணிக்கு ஒரு போதும் நான் செல்ல மாட்டேன், அமைச்சர் பதவி கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என செம்மலை எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
தினகரன் அணிக்கு ஒரு போதும் நான் செல்ல மாட்டேன்: செம்மலை எம்.எல்.ஏ.பேட்டி
Published on

சென்னை:

அ.தி.மு.க. அணிகள் பிரிந்த போது மேட்டூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

தற்போது ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்தது.

இந்த நிலையில் அமைச்சர் பதவி வழங்கப்படாததால் ஓ.பன்னீர்செல்வம் மீது செம்மலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக செம்மலை எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அணிகள் பிரிந்தபோது ஓ.பி.எஸ்.சை தலைவராக ஏற்றுக் கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், முன்னணி தலைவர்கள் இணைந்தோம். ஓ.பி.எஸ். தலைமையிலேயே நாங்கள் செயல்பட்டோம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆதரவாளர்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்டோம்.

அமைச்சர் பதவி கிடைக்காததால் நான் தினகரன் அணிக்கு மாறப் போவதாக தகவல் பரவியுள்ளது. அதுபோன்ற அணி மாறும் மனநிலை எனக்கு இல்லை.

தலைமை கழகத்தில் நடந்த இணைப்பு விழாவில் நான் கலந்து கொண்டேன். கவர்னர் மாளிகை நிகழ்ச்சி திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முன்னணி நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் பங்கேற்கவில்லை.

அதே நேரத்தில் என்னை நம்பி வந்த ஆதரவாளர்கள் எனக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததால் கருத்துக்களை பதிவு செய்து இருக்கலாம். அவர்கள் அதிருப்தியில் இதை செய்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com