

சேலத்தில் இன்று அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் எம்.எல்.ஏ. செம்மலை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள், கூட்டுறவு சங்கங்களில் உள்ள இயக்குனர்கள் மற்றும் போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை பணி மாற்றம் மற்றும் நீக்கம் செய்து வருகின்றனர்.
மேலும், ஓ.பன்னீர் செல்வம் ஆதராவளர்கள் பொதுமக்கள் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண முயன்றால் அதற்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நாங்கள் கொண்டு போகும் பொது மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும், பணிகளையும் செய்யக்கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் எதிர் அணியினர் இரு அணிகளும் இணையும் என்று வெளியில் கூறுகின்றனர். ஆனால் இணைப்பதற்கு உண்டான எந்த செயலையும் செய்யாமல் நாடகம் ஆடுவதை ஓ.பன்னீர் செல்வம் தெளிவாக தெரிந்து கொண்டு உசிலம்பட்டியில் அளித்த பேட்டியில் இணைப்பு என்ற கமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து இணைப்பு குழுவையும் கலைத்தார். எங்கள் அணியினைரை அவர்கள் தீண்ட தகாதவர்களாகவே பார்க்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றபோது முறையான மரியாதை தரவில்லை என்று சிலர் கூறுவதாக தகவல் அறிந்தேன். பா.ஜ.க. வின் தேசிய தலைவர் அமித்ஷா ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதரவு கோரினார். அதற்கு ஆதரவு தெரிவித்து டெல்லி சென்ற அவருக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் மனுவில் ஓ.பன்னீர்செல்வம், மைத்ரயேன் எம்.பி. ஆகியோர் முன்மொழிந்தனர்.
பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்- அமைச்சர்களிடம் பிரதமர் என்ற முறையில் ஆதரவு கோரினார். அந்த முறையிலேயே எடப்பாடி பழனிசாமி அங்கு சென்றாரே தவிர ஒரு இயக்கத்தின் சார்பில் சென்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கு தகுந்த மரியாதை கொடுத்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவின் தேர்வு இந்திய தேர்தல் ஆணையத்தால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர் முறையாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுபவரே பொதுச்செயலாளராக செயல்பட முடியும். அதுவரை அந்த பதவி வெற்றிடமாகவே இருக்கும். தற்போது அந்த பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாகவே இருக்கிறது.
பின்னர் அவர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது:-
கே: துணை சபாநாயகர் தம்பித்துரை நேற்று பேட்டியின் போது இருஅணிகளும் இணையும் என்று கூறினாரே?
ப: அந்த அணியினர் வெளியில் பேசுவது ஒன்றும், திரைமறைவில் பேசுவது ஒன்றும் வழக்கம். அப்படி ஒரு நிலை உருவாக வாய்ப்பே இல்லை. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
கே: 122 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்று அவர்கள் கூறி உள்ளார்களே?
ப: அந்த 122 எம்.எல்.ஏ.க்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது என்று பத்திரிக்கையாளர்களான உங்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். சட்டசபையில் அந்த எம்.எல்.ஏ.க்களில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதிலே தெரிகிறது.
கே: டி.டி.வி.தினகரன் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாரே?
ப: எந்த அடிப்படையில் ஆதரவு தெரிவித்தார் என்று அவரே தான் பதில் கூற வேண்டும்.
கே: மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. கட்சி, பா.ஜ.க. கட்டுபாட்டில் உள்ளது என்று தெரிவித்துள்ளாரே?
ப: அதை அவரிடமே கேட்டால் தான் எந்த கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியவரும்.
கே: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் உள்ளனரா?
ப: அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி தான் தோன்றித்தனமாக பேசுகிறார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வைகை செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாறி மாறி கொடுத்த பேட்டி இதற்கு சாட்சி.
கே: அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணிக்கு தற்போது கட்சியினர், பொது மக்கள் இடையே ஆதரவு எப்படி உள்ளது?
ப: இந்த தர்மயுத்தத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முதல் கட்சியின் கடைசி தொண்டன் வரை ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதற்கும் மேலாக மாற்றுக் கட்சியினர் எங்கள் கட்சியில் இணைந்து ஆதரவு தருவதும் பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருவதை நீங்களே அறிவீர்கள்.
கே: தற்போது முதல்- அமைச்சரின் நிலை என்ன?
ப: இருக்கும் 122 எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்கும், அவர்களின் குழப்பங்கள் மற்றும் சச்சரவுகளை சமாளிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கே: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழுமா?
ப: அ.தி.மு.க. அம்மா அணியில் உள்ளவர்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் தற்போது இல்லை. அந்த கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் அவர்களாகவே ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையை அவர்களே உருவாக்கி கொள்வார்கள்.
கே: கூவத்தூரில் இருந்த போது எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுப்பது குறித்து பேசப்பட்டதா?
ப: நான் அங்கிருந்து ஒரு நாளில் தப்பி வந்ததே பெரிய விஷயம். என்னிடம் அப்படி எந்த பேரமும் பேசவில்லை. நான் பணத்திற்காக என் கொள்கையையும், சூழ்நிலையையும் மாற்றிக் கொள்பவன் அல்ல. பொது சேவைக்காவே அரசியலுக்கு வந்தேன்.
கே: ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அரசு அமையுமா?
ப: அ.தி.மு.க. 3 அணிகளாகவே இருந்தாலும், ஜெயலலிதாவால் 3 முறை முதல்-அமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சியினர் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுப்பதால் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.