5 பைசா செலவில் 1 லிட்டர் குடிநீர் - தூத்துக்குடியில் சோதனை தொடக்கம்

ஒரு லிட்டர் குடிநீர் 5 பைசா செலவில் பெறும் வகையில் தூத்துக்குடியில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் சோதனை தொடங்கி உள்ளது.
5 பைசா செலவில் 1 லிட்டர் குடிநீர் - தூத்துக்குடியில் சோதனை தொடக்கம்
Published on: 

குடிநீர் பிரச்சினையில் சிக்கியுள்ள பல்வேறு உலக நாடுகள் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.

குறிப்பாக அரபு நாடுகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மிகப்பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது. கடல் நீரில் இருந்து உப்பு மற்றும் பல்வேறு வேதிப் பொருட்களை வெளியேற்றி குடிநீராக பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக தொழிற்சாலைகளில் நவீன எந்திரங்கள் அமைக்கப்பட்டு அங்கு கடல் நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக மாற்றி விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை அருகே மீஞ்சூர், நெமிலி ஆகிய இடங்களிலும், தென் சென்னையில் பட்டிபுலத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் குடிநீராக மாற்றப்பட்டு சென்னை நகரில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அதிக செலவாகும் என்றாலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநில அரசுடன் மத்திய அரசு நிதி உதவியும் பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது போல் தமிழக கடலோர பகுதிகளில் மேலும் 5 இடங்களில் கடல் நீரை குடி நீராக்கும் ஆலைகள் நிறுவ தமிழக அரசு திட்டம் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி நிதி உதவியும் கோரியது. இந்த ஆலைகள் ரூ.700 கோடி செலவில் நிறுவப்பட இருப்பதால் மத்திய அரசு ரூ.210 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு தற்போது சோதனை அடிப்படையில் குடிநீர் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இங்கு குடிநீர் உற்பத்தி பணி தொடங்கும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசுகையில் இதுபற்றி கூறியதாவது:-

உலகின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல கிராமங்களும், நகரங்களும் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பருவமழை மாற்றம், நீர் வளங்கள் சுரண்டப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

கடல்நீரை குடிநீராக மாற்றுவதற்கான முன்னோடி திட்டம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அந்த திட்டம் நிறைவடைந்ததும் கடல்நீரை சுத்திகரித்து பெறப்படும் குடிநீர் லிட்டருக்கு 5 பைசா என்ற விகிதத்தில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதேபோல் இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ள கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com