ராதாபுரம் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் மாற்றப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் மாற்றப்பட்டதை கண்டித்து மாணவ-மாணவிகள் இன்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நி.வெ.செ அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு கணக்குபதிவியல் எடுத்து வந்த ஆசிரியர் ரவீந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வளன் ஆகிய இருவரும் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இன்று பணிக்கு வரவில்லை.

இதனையறிந்த நி.வெ.செ அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ரவீந்திரன் மற்றும் வளன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளுடன் பள்ளியின் தலைமையாசிரியர் லாரன்ஸ், ராதாபுரம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வெகுநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மாணவ-மாணவிகள் போராட்டம் குறித்து தகவலறிந்த மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரான ரவீந்திரன் பள்ளிக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை சமரசம் செய்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து மாணவ-மாணவிகள் கூறும்போது, “திறமையான ஆசிரியர்களான ரவீந்திரன், வளன் ஆகிய இருவரும் வேண்டுமென்றே மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மாற்றப்பட்டதால் எங்களது கல்வி பாதிக்கப்படும். ஆகவே அவர்களை எங்களது பள்ளியிலேயே மீண்டும் பணியமர்த்த வேண்டும்” என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com