

புதுடெல்லி:
ஆதார் வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 9 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 'தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே' என்று தீர்ப்பளித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தியும் இந்த தீர்ப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் சுப்ரிம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பாசிச சக்திகளுக்கு விழுந்த அடி என கூறியுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
இந்த தீர்ப்பு அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி. ஆதார் வழக்கில் தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு, பாசிச சக்திகளுக்கு விழுந்த பெரும் அடியாகும்.
"கண்காணிப்பு மூலம் ஒடுக்குமுறை" எனும் பா.ஜ.க.வின் சித்தாந்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.