

புதுடெல்லி:
ஊரடங்கு காலத்தில், நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியத்தையும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து, அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த உத்தரவு மார்ச் 25ம்தேதி முதல் மே 17 வரையிலான 54 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதற்கான உத்தரவை மீறியதற்காக முதலாளிகளுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தனர். பின்னர் இந்த உத்தரவை ஜூன் 12 வரை நீட்டித்தனர். மேலும் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.
அதன்படி இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டு, இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, முதலாளிகளுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த உத்தரவு நீடிக்கும் என்றும் நீதிபதி பூஷன் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் மத்திய அரசு ஜூலை கடைசி வாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இடையே மாநில அரசு தொழிலாளர் துறைகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.