ராகுல், சோனியா மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பாக சோனியா, ராகுல் காந்தியின் வருமான கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
ராகுல், சோனியா மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
Published on

அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் துவக்கப்பட்டது.

மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.

பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உண்டு.

இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி  ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.

2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும்.

யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் கட்சி வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது.

அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி மதிப்புள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.

தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல்  AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது.

இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது.

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் 50 லட்சம் ரூபாய் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது.

இதற்கிடையில், கடந்த  2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு தடை விதிக்ககோரி டெல்லி ஐகோர்ட்டில் இவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோரை கொண்ட அமர்வு 9-10-2018 அன்று உத்தரவிட்டது.

இந்த மனுவின்மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும், கடந்த 2011-12 ஆண்டுக்கான சோனியா, ராகுல் காந்தியின் வரவு-செலவு கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்தனர். எனினும், தற்போது இங்கு விசாரணையில் உள்ள இந்த வழக்கு முடியும்வரை இந்த உத்தரவை அமல்படுத்த கூடாது என்று நிபந்தனையும் விதித்துள்ளனர். #NationalHerald #SoniaITcase #RahulITcase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com