

தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியாவுக்கு ராசியான மைதானம் என்றால், அது ஜோகன்னஸ்பர்க் நியூ வான்டரர்ஸ் தான். இங்கு தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 4 டெஸ்டுகளில் விளையாடி அதில் ஒன்றில் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்ற போது, அது தென்ஆப்பிரிக்காவில், இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியாக அமைந்தது. தெண்டுல்கர், டிராவிட், விராட் கோலி, புஜாரா ஆகிய இந்தியர்கள் இந்த மைதானத்தில் சதம் அடித்துள்ளனர். தென்ஆப்பிரிக்க அணி இங்கு 37 டெஸ்டுகளில் ஆடி 15-ல் வெற்றியும், 11-ல் தோல்வியும், 11-ல் டிராவும் சந்தித்துள்ளது.
இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது குறித்து அதன் பராமரிப்பாளர் புட்யூல் புதல்ஜி கூறுகையில் ‘ஆடுகளத்தை பார்த்து தென்ஆப்பிரிக்க வீரர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இங்கு பந்து வேகத்துடன் நன்கு பவுன்ஸ் ஆகும். பயிற்சியில் ஈடுபட்ட இந்தியர்களுக்கும் இந்த ஆடுகளம் திருப்திகரமாக இருப்பது போன்று தான் தெரிகிறது. 5 நாட்களும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையே காணப்படும்’ என்றார்.