சேலம் மாம்பழம் விலை 20 சதவீதம் அதிகரிப்பு

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட சேலம் மார்க்கெட்களில் மாம்பழங்கள் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
சேலம் மாம்பழம் விலை 20 சதவீதம் அதிகரிப்பு
Published on

சேலம்:

சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். அந்த வகையில் பெயர் பெற்ற சேலம் மாம்பழத்தின் சீசன் தற்போது தொடங்கி உள்ளது.

சேலம் மார்க்கெட்களுக்கு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான நங்கவள்ளி, சோரகை, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, மஞ்சுவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மாம்பழங்கள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு சேலத்தில் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக சேலம் கடை வீதி, வ.உ.சி. மார்க்கெட், உழவர் சந்தைகள், செவ்வாய்ப் பேட்டை பால் மார்க்கெட், அஸ்தம்பட்டி-ஏற்காடு சாலை மற்றும் சாலையோர தள்ளுவண்டிகளிலும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மாம்பழங்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.

இது தவிர வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு கொரியர்கள் மூலமும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் சேலத்தில் மாம்பழ விற்பனை சூடு பிடித்துள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வழக்கமாக சேலம் மாவட்டத்திற்கு அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் இந்த ஆண்டு அந்த பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டை விட குறைவாக சேலத்திற்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் சூறைக்காற்றால் ஏராளமான மாம்பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் அந்த பகுதியில் உற்பத்தி கடந்த ஆண்டை விட குறைந்ததால் சேலம் மார்க்கெட்களுக்கு அங்கிருந்து மாம்பழங்கள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட சேலம் மார்க்கெட்களில் மாம்பழங்கள் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

சேலம் மார்க்கெட்களில் இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, மல்கோவா ஆகிய பழங்கள் 50 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையும், நடுசாலா, பங்கணப்பள்ளி ஆகிய பழங்கள் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையும், செந்தூரா ரக பழங்கள் 20 முதல் 50 ரூபாய் வரையும், அல்போன்சா ரக பழங்கள் 40 முதல் 80 ரூபாய் வரையும், கிளிமூக்கு பழங்கள் 10 முதல் 30 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மாம்பழ சீசன் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு இதே போல மாம்பழ வரத்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com