குஜராத்தில் பிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

குஜராத்தில் பிரியாவாரியர் கண் சிமிட்டல் காட்சியுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக வடோதரா நகர போலீஸ் கமி‌ஷனர் மனோஜ் சசிதர் கூறினார்.
குஜராத்தில் பிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
Published on

திருவனந்தபுரம்:

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு செயல், சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் சமீபத்தில் மலையாள இளம் நடிகையான பிரியாவாரியரின் கண் சிமிட்டல் பல லட்சம் பேரின் உள்ளத்தை கொள்ளைகொண்டது.

மலையாளத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ என்ற சினிமாவில் நடிகை பிரியா வாரியர் தனது காதலனை பார்த்து கண் சிமிட்டி தனது காதலை வெளிப்படுத்தும் அந்த காட்சிதான் அது. அதை தொடர்ந்து இது போன்ற அவரது பல்வேறு முக பாவனைகள் சமூக வலை தளங்களை கலக்கி வருகிறது.

இந்த நிலையில் பிரியா வாரியரின் கண் சிமிட்டல் காட்சியை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு போலீசார் பயன்படுத்தும் அளவுக்கு அது புகழ்பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் சாலை விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும் அந்த மாநில போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதன் ஒருகட்டமாக குஜராத் மாநிலம் வடோதரா போக்குவரத்து போலீசார் பிரியாவாரியரின் கண் சிமிட்டல் காட்சியுடன் போக்குவரத்து பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கை வாசகத்துடன் தயாரித்துள்ள விழிப்புணர்வு பிரசார படம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து உள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரசார படத்தை அந்த மாநில போலீசார் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் வாகனத்தை ஓட்டும்போது கண்சிமிட்டும் நேரம் கவனக்குறைவு ஏற்பட்டாலும் அது விபத்தை ஏற்படுத்திவிடும் என்ற போக்குவரத்து விழிப்புணர்வு வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி வடோதரா நகர போலீஸ் கமி‌ஷனர் மனோஜ் சசிதர் கூறும்போது பொது மக்களுக்கு அறிவுரை கூறும் போது திரைப்பட நட்சத்திரங்கள் மூலம் அதை தெரிவித்தால்தான் எளிதில் அது அவர்களை சென்றடைகிறது. சாலை பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் பல கிராபிக்ஸ் படங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். அதுபோல பிரியாவாரியர் கண் சிமிட்டல் காட்சியுடன் தற்போது இதை தயாரித்து உள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து உள்ளது என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com