ராணுவம் குறித்து மோகன் பகவத் சர்ச்சைப் பேச்சு: சீறிப்பாய்ந்த ராகுல் காந்தி

ராணுவ வீரர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது ஒவ்வொரு இந்தியனையும் அவமானப்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.#RSS #RahulGandhi
ராணுவம் குறித்து மோகன் பகவத் சர்ச்சைப் பேச்சு: சீறிப்பாய்ந்த ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ராணுவம் ஒரு போருக்கு தயாராக 6 முதல் 7 வாரங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், நம் தொண்டர்கள் மூன்று நாட்களில் தயாராகிவிடுவார்கள். இதுதான் நமது பலம்” என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.

மோகன் பகவத்தின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. ராணுவத்தை அவமானப்படுத்திய அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன. இதனை அடுத்து, மோகன் பகவத்தின் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.எஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், மோகன் பகவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “மோகன் பகவத்தின் பேச்சு ஒவ்வொரு இந்தியனையும் அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. ஏனென்றால், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் வீரர்களை அவமரியாதை செய்யும் விதமாக அந்த கருத்து உள்ளது. ராணுவ வீரர்கள் தினமும் சல்யூட் அடிக்கும் தேசிய கொடியை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. இதற்கு ஆர்.எஸ்.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், மோகன் பகவத் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது என கேரள முதல்வர் பினராயி விஜயனும், மோகன் பகவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #RSS #RahulGandhi

X

Maalai Malar
www.maalaimalar.com