

கோவை:
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி(வயது 49).
ஈச்சனாரியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக மகேஸ்வரி தனது மகன் பார்த்திபனுடன் சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். ஆர்.எஸ்.புரம் மேற்கு பெரிய சாமி ரோட்டில் சென்ற போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்கசெயினை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். உடனே பார்த்திபன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அதற்குள் நகை பறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி உமாராணி. நேற்று முன்தினம் இரவு டியூசனுக்கு சென்றிருந்த மகளை அழைத்துக் கொண்டு உமாராணி பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் உமாராணி அணிந்திருந்த 6 பவுன் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இருபுகார்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.