

சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம், பள்ளத்தூர், படவீடு கிராமத்தைச் சேர்ந்த பி.வி.நந்திதா 2016-ம் ஆண்டு மே மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டியில் பட்டம் பெற்றார்.
மேலும் ஆகஸ்டு மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான 34வது உலக சதுரங்க வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டிற்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
இந்த சாதனைகளைப் பாராட்டி அவர் மேலும் பல சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சதுரங்க விளையாட்டு வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டினார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சார்லஸ் மனோகர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.