ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைகளுக்காக ரூ.39.5 கோடி நிதி வசூல்

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக ரூ.39.5 கோடி நிதி வசூலாகி இருப்பதாக தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #Tamilchair #HarvardUniversity
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைகளுக்காக ரூ.39.5 கோடி நிதி வசூல்
Published on

சென்னை:

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கா வாழ் தமிழக மருத்துவர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சியில் இறங்கி, நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், நிதிப் பற்றாக்குறை நிலவிவந்தது.

தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு, 10 கோடி ரூபாய் நிதியாக அளித்தது. உலக தமிழ் ஆராய்ச்சி மையம் சார்பில் 2.6 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்பட்டதால், பல சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக ஆசிரியர் சங்கம் எனப் பல அமைப்புகள் தொடர்ந்து நிதி உதவி வழங்கியும் சேகரித்தும் வருகின்றனர்.

தமிழக அரசு மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் தவிர 26 நாடுகளில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக நிதி வழங்கியுள்ளனர். தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் 20 லட்ச ரூபாய் நிதி வழங்கினார். ராமசாமி என்னும் ஓய்வுபெற்ற ஆசிரியர் தனது ஓய்வூதிய பணத்தில் இருந்து 5 லட்ச ரூபாய் வழங்கினார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கோலாலம்பூரைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் சோமசுந்தரம் என்பவர் தமிழ் இருக்கை அமைப்பதற்காக 1 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வரை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக 39.5 கோடி ரூபாய் நிதியாக வசூலாகி இருப்பதாக தமிழ்நாடு மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #Tamilchair #HarvardUniversity #TamilchairFund #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com