

பல்லடம்:
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் ரூ.8 கோடி மதிப்புள்ள 2 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஜவுளித்தொழில் மூலம் நேரடியாக 1 லட்சம் பேரும் மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் .
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஜவுளி ஏற்றுமதி மொத்தமாக பாதிப்படைந்துள்ளது.
இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது: கடந்த 6 மாதகாலமாக கேம்பர் பஞ்சு ஏற்றுமதி அதிகரிப்பால் உள்நாட்டில் விசைத்தறி துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நமது நாட்டில் இருந்து அயல்நாடுகளுக்கு செயற்கை இழை துணி ரகங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வட மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் டையிங் ஆலைகளில் துணி சலவை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட 20 கோடி முதல் 25 கோடி மீட்டர் துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் துணி உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு ஏற்கனவே தள்ளப்பட்டுள்ளோம். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டியது நிலை உள்ளது.
இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வருமானம் குறைந்துள்ளது. பல்லடம் பகுதியில் பொருளாதாரம் பாதித்துள்ளது. வங்கதேசம்,சீனா ஆகிய நாடுகள் துணியை விலை குறைவாக தருவதால் நமது ஏற்றுமதி பாதிப்படைகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலையில் சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர்.
ஜவுளி ஏற்றுமதி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. ஜவுளி உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழிலில் தமிழகம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 70 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜவுளி தொழிலை பாதுகாக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி மற்றும் அசல் செலுத்த 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் வருமான வரி இந்த ஆண்டு செலுத்துவதில் இருந்து ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நேற்று முதல் வரும் 20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தியை நிறுத்துவது என்று முடிவு செய்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எங்களது சங்கம் பாராட்டுகிறது.
இவ்வாறு கூறினார்.
பல்லடம் பகுதியில் தேக்கம் அடைந்துள்ள காடாதுணிகள்.