மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது
கைது
Published on: 

மதுரை:

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). ரவுடியான இவர் மீது கரும்பாலை பி.டி. காலனியை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கொலை செய்தது தொடர்பாக விளக்குத் தூண் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முருகன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் 101-வது வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை வார்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

கொலை சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து வார்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவை ஆய்வு செய்தனர். ராஜசேகர் கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக முருகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மதிச்சியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர் கொலை தொடர்பாக முருகனின் மனைவி நாகலட்சுமி, பட்டா ராஜசேகர் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலையாளிகள் சிவகங்கையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை சிவகங்கை மணலூர் பகுதிக்குச் சென்றனர். அங்கு பதுங்கி இருந்த அருண்பாண்டி (20), கரண்ராஜ் (20), தவசிபாண்டி (19), ஜெகதீஷ்வரன், சல்மான் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X