

மதுரை:
மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ரபீக் ராஜா என்ற வாழைக்காய் ரபீக் ராஜா (வயது 41). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரபீக் ராஜா கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ரபீக் ராஜா தனது நண்பர்கள் மன்சூர், மருதுபாண்டி ஆகியோருடன் வெளியே சென்றார்.
நள்ளிரவு 12.30 மணியளவில் 3 பேரும் ரபீக் ராஜா வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்தது. ஆள் நடமாட்டம் இல்லாததால் அந்த கும்பல் திடீரென்று 3 பேர் மீதும் வெடி குண்டுகளை வீசியது.
குண்டு வெடித்ததில் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிதறி ஓடினர். ரபீக் ராஜா தனது வீட்டிற்கு செல்ல முற்பட்டார். ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.
அதற்குள் அந்த கும்பல் ரபீக் ராஜாவை நெருங்கியது. இதைப்பார்த்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் அவரது முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தெப்பக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரபீக் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ரபீக் ராஜாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன் விரோதத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews