ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்பாளர்கள் தாக்கல் செய்ததைவிட கூடுதலாக செலவு செய்ததாக மதிப்பீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்குகளைவிட கூடுதலாக செலவு செய்ததாக மேலிட தேர்தல் பார்வையாளர் மதிப்பீடு செய்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்பாளர்கள் தாக்கல் செய்ததைவிட கூடுதலாக செலவு செய்ததாக மதிப்பீடு
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்குகளைவிட கூடுதலாக செலவு செய்ததாக மேலிட தேர்தல் பார்வையாளர் மதிப்பீடு செய்துள்ளார். இந்த விவர பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களது செலவு கணக்குகளை தாக்கல் செய்தனர். அந்த விவரங்களுடன், மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு நடத்தி மதிப்பிட்டு இருந்த செலவு விவரங்களையும் இணைத்து நேற்று மாலை தேர்தல் ஆணையம் பட்டியலை வெளியிட்டது.

இதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்கைவிட, மத்திய பார்வையாளர்கள் மதிப்பிட்டு இருந்த செலவு கணக்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தனது செலவு கணக்காக ரூ.16 லட்சத்து 48 ஆயிரத்து 799 என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்து 71 செலவு செய்ததாக தேர்தல் பார்வையாளர் குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் அவர் கூடுதலாக ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 272 செலவு செய்ததாக தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனன் தான் குறிப்பிட்டிருந்த தொகையைவிட (ரூ.20,05,573) ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 289 அதிகமாக செலவு செய்திருப்பதாகவும், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் கூடுதலாக ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 968-ம், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் கூடுதலாக ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 143-ம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் கூடுதலாக ரூ.16,130-ம் செலவு செய்ததாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனன் அதிக செலவு செய்த வேட்பாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ரூ.24¾ லட்சம் செலவு செய்திருக்கிறார். மிகவும் குறைவாக செலவு செய்தவராக சுயேச்சை வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் உள்ளார். அவர் ரூ.1,600 மட்டுமே செலவு செய்திருக்கிறார்.

ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்து இருந்தது. ஆனால் வேட்பாளர்கள் யாரும் ரூ.28 லட்சத்துக்கு மேல் செலவு செய்ததாக குறிப்பிடப்படவில்லை என்பதால் தகுதிநீக்கம் போன்ற எந்த நடவடிக்கைக்கும் வேட்பாளர்கள் ஆளாக மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com