உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு- தாயை கைது செய்ய வேண்டாம் என அழுது புலம்பிய சிறுமி

கோவையில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தாயை கைது செய்ய வேண்டாம் என அதிகாரிகளிடம் சிறுமி அழுது புலம்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு- தாயை கைது செய்ய வேண்டாம் என அழுது புலம்பிய சிறுமி
Published on

கோவை:

தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு ஆங்காங்கே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் போகம்பட்டி பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணிக்கு அதிகாரிகள் வந்தனர்.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர் .

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் விவசாயிகள், பொதுமக்கள் நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையுமம் போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது அங்கிருந்த பெண் ஒருவர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுரம் ஒன்றில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை கீழே இறக்கி சமரசப்படுத்தினர். அப்போது அந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தனது தாயை கைது செய்ய வேண்டாம் என்று கூறி சிறுமி கண்ணீர் மல்க போலீசாரிடம் இருகைகளையும் கூப்பி வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயை போலீசார் கைது செய்யவில்லை. மேலும் அச் சிறுமி தங்களது நிலங்களை அளவீடு செய்ய வேண்டாம். வெளியே செல்லுங்கள்... வெளியே செல்லுங்கள்... என்று கூறி கண்ணீர் மல்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com