செம்மரம் கடத்தியதாக பொய் வழக்கு: காஞ்சீபுரம் மாணவரை 18 மணி நேரம் சித்ரவதை செய்த ஆந்திர போலீஸ்

செம்மரம் கடத்தியதாக காஞ்சீபுரம் மாணவர் மீது ஆந்திர போலீசார் பொய் வழக்கு போட்டு 18 மணி நேரம் சித்ரவதை செய்தனர்.
மாணவர் எம்.ஸ்டாலின்
மாணவர் எம்.ஸ்டாலின்
Published on

திருப்பதி:

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்தவர் எம்.ஸ்டாலின். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் இவர் உறவினர்கள் வருகைக்காக திருப்பதி பஸ் நிலையத்தில் நள்ளிரவில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது ரோந்து வந்த திருப்பதி போலீசார் ஸ்டாலினிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள். அவருக்கு தெலுங்கு தெரியாததால் தமிழில் அவர் சொன்ன தகவல்கள் போலீசாருக்கு சரிவர புரியவில்லை. மேலும் தன்னை மாணவன் என்றும் ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தார்.

ஆனால் செம்மரம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என பொய்யாக குற்றம் சாட்டி அவரை திருப்பதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

18 மணி நேரம் தொடர்ந்து ‘லாக்-அப்’பில் அடைத்து பூட்ஸ் காலால் தலை, வயிறு போன்ற இடங்களில் எட்டி உதைத்து சித்ரவதை செய்தனர். தன்னைப் பற்றி மற்ற மாணவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

முடிவில் மாணவர் ஸ்டாலினுக்கும் செம்மர கடத்தலுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்ததும் போலீசார் அவரை விடுதலை செய்தனர். ஆனால் போலீசார் சித்ரவதையால் படுகாயம் அடைந்த ஸ்டாலினால் நடக்க கூட முடியாமல் தட்டுத்தடுமாறி ஆஸ்பத்திரிக்கு சென்று சேர்ந்தார்.

இதற்கிடையே மாணவர் சித்ரவதை பற்றி கேள்விப்பட்டதும் மனித உரிமை கமி‌ஷன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி ஆந்திர அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசும் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர் சித்ரவதை தொடர்பாக திருப்பதி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் குமார் ரெட்டி இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நடவடிக்கை போதாது சித்ரவையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் வெங்கடேஷ், சண்முக சுந்தரம், முரளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இதற்கிடையே மாணவர் ஸ்டாலின் கூறும் போது என்னை போலீஸ்காரர்கள் வயிறு, தலை உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தாக்கி காயப்படுத்தினார்கள். ஆனால் தவறை உணர்ந்து கொண்ட பிறகு போலீசார் என்னிடம் சமரசம் பேசினார்கள். காயத்துக்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்கள். நான் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com