சிவப்பு நிற ரேசன் கார்டுகளுக்கு அரிசி, கொண்டைக்கடலை நாளை முதல் வினியோகம்

புதுவையில் சிவப்பு நிற ரேசன்கார்டுகளுக்கு அரிசி மற்றும் கொண்டைக்கடலை நாளை(புதன்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
ரேசன் கடை  (கோப்புப்படம்)
ரேசன் கடை (கோப்புப்படம்)
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் பணிக்குச் செல்ல முடியவில்லை. எனவே மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ அரிசி ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாத காலத்திற்கு ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதேபோல் மேற்கூறிய கால கட்டத்திற்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்க ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 9,224 மெட்ரிக் டன் அரிசியும், 494 மெட்ரிக் டன் துவரம் பருப்பும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 5 மாத காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசியும், குடும்ப அட்டைகளுக்கு மாதம் 1 கிலோ கொண்டைக்கடலையும் வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக 15,859.75 மெட்ரிக் டன் அரிசியும், 878.235 மெட்ரிக் டன் கொண்டைக்கடலையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே இந்த திட்டத்தின் முதல் கட்டமாக சிவப்பு நிற ரேசன்கார்டுகளுக்கு ஜூலை முதல் செப்டம்பர் வரை 3 மாதத்திற்கான அரிசியும், கொண்டைக்கடலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் தொடக்கமாக நெட்டப்பாக்கம், பாகூர், ஏம்பலம், திருபுவனை மற்றும் மணவெளி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவப்பு நிற ரேசன்கார்டுகளுக்கு நாளை(புதன்கிழமை) முதல் அரிசி, கொண்டைக்கடலை வினியோகம் செய்யப்படும். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்திற்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்ட அதே பள்ளி மற்றும் இதர மையங்களில் இவை வினியோகிக்கப்படும். பயனாளிகள் அங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com