

போபால்:
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் கருத்து ஒற்றுமை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு யோசனை தெரிவித்தார்.
மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் மாநில அளவிலான மகளிர் சுய உதவிக்குழு மாநாடு நேற்று நடைபெற்றது. அதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:-
பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும். இதில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது. தனிப்பட்ட முறையில், இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தாலும், அந்த பெண்களின் கணவன்மார்கள்தான் உண்மையிலேயே அதிகாரம் செலுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட கற்றுக்கொள்வார்கள். இதற்கு சட்டத்தில் மட்டுமின்றி, மனப்போக்கிலும் மாறுதல் தேவை.
பிள்ளைகளில் மகன் என்றும், மகள் என்றும் பாரபட்சம் காட்டக்கூடாது. குடும்ப சொத்துகளை இருவருக் கும் சமமாக பிரித்து தர வேண்டும்.
நமது நாடு ‘பாரத் மாதா’ என்றுதான் அழைக்கப்படுகிறது. நமது பழங்கால இலக்கியங்களில் சரஸ்வதியை ‘கல்வி மந்திரி’ என்றும், துர்க்கையை ‘பாதுகாப்பு மந்திரி’ என்றும், லட்சுமியை ‘நிதி மந்திரி’ என்றும் குறிப்பிடுகிறோம். பெண்களுக்கு வாய்ப்பு அளித்தால், அவர்கள் திறம்பட செயல்படுவார்கள். பாதுகாப்பு மந்திரி, நிதி மந்திரி, பாராளுமன்ற சபாநாயகர் போன்ற பதவிகளை பெண்கள் வகித்துள்ளனர்.
மத்திய அரசின் ‘ஜன்தன் யோஜனா’ வங்கிக்கணக்கு திட்டத்தை எத்தனையோ பேர் எதிர்த்தனர். ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, அந்த கணக்கின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டனர்.
கருப்பு பணத்தை தங்களது படுக்கையறையிலும், குளியலறையிலும் பதுக்கியவர்கள், தங்களது வீட்டு வேலைக்காரர்களிடமும், டிரைவர்களிடமும், கொடுத்து, ‘ஜன்தன்’ வங்கிக்கணக்கில் போட சொன்னார்கள். எப்படியோ அந்த பணம், வங்கிக்கு சென்று சேர்ந்து விட்டது.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.