ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4-வது முறையாக அதே நிலையில் நீடிக்கிறது. #RBI #Repo
ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த முறையும் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி
Published on

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் மாற்றம் எதுவும் செய்யக்கூடாது என 5 உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஒரு உறுப்பினர் மட்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக தொடர்கிறது.

இதன்மூலம் நான்காவது முறையாக ரெப்போ விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை. கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 2019-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டில் பணவீக்கம் 4.7-5.1 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இரண்டாவது அரையாண்டில் 4.5-4.6 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.1 சதவீதம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. #RBI #Repo 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com