

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 7-6 (8-6), 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் பாப்லோ கார்ரினோ பஸ்தா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை வீழ்த்தி காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-7 (8-10), 2-6 என்ற நேர்செட்டில் 15-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டென்சிடம் (பெல்ஜியம்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7 (3-7), 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்சிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.