முதல்வர் நாற்காலியை பிடிக்க ரங்கசாமி முயற்சி செய்தார்: நாராயணசாமி தாக்கு

பதவி மோகம் காரணமாக முதல்-அமைச்சர் நாற்காலியை பிடிப்பதற்கு ரங்கசாமி பல கட்டங்களில் முயற்சி செய்து வந்தார் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
முதல்வர் நாற்காலியை பிடிக்க ரங்கசாமி முயற்சி செய்தார்: நாராயணசாமி தாக்கு
Published on

காரைக்கால்:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வந்திருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி இருந்தாலும் கூட நாங்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கிடையில் ஒருசிலர் மாநில வளர்ச்சியை குலைப்பதற்காக முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

புதுவை மாநில மக்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்தார்கள். ஆனால் என்.ஆர்.காங்கிரசானது 8 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தார்கள். இப்பொழுது எத்தனை வைத்திருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. பதவி மோகம் காரணமாக முதல்-அமைச்சர் நாற்காலியை பிடிப்பதற்கு பல கட்டங்களில் முயற்சி செய்து வந்தார்கள். அது முடியவில்லை.

இப்பொழுது பல அணிகளுடன் இணைந்து கொண்டு எங்களது அரசின் வளர்ச்சித் திட்டங்களை குலைப்பதற்காகவும், மக்கள்நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகவும் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு ஒரு பலமான கூட்டணி அரசாக விளங்குகிறது.

மத்திய அரசானது மாநில அரசுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் 3 நியமன உறுப்பினர்களை அறிவித்துள்ளது. 3 நியமன உறுப்பினர்களை நியமிப்பதற்கு மாநில அரசுக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு. மத்திய அரசு நேரடியாக நியமிக்க முடியாது என்பதை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். நாங்கள் வழக்கு தாக்கல் செய்த பிறகு 3 நியமன உறுப்பினர்களை நாங்கள் நியமிக்க மாட்டோம் என்று கூறினர். அதைமீறி கொல்லைப்புறம் வழியாக 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் துணை சபாநாயகரை எதிர்த்து நின்று டெபாசிட் இழந்த சாமிநாதனை சட்டமன்ற உறுப்பினராக நியமித்து இருக்கிறார்கள். பா.ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் சங்கர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உறுப்பினர் செல்வகணபதியும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த 3 நியமனங்களும் செல்லாது என்று நாங்கள் கூறி வருகிறோம்.

நீதிமன்றத்தில் அடுத்த வாரம் இந்த வழக்கு வருகிறது. நியமனம் செய்யப்பட்டுள்ள அந்த 3 பேர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். நீதிமன்றம் நிச்சயமாக நல்ல தீர்ப்பை எங்களுக்கு வழங்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com