ராமநாதபுரத்தில் தினகரன் அணி நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தினகரன் அணி நிர்வாகிகள் வீட்டில் மர்ம மனிதர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
ராமநாதபுரத்தில் தினகரன் அணி நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கொத்தர் தெருவைச் சேர்ந்தவர் கமல். இவர் டி.டி.வி.தினகரன் அணி இளைஞர் அணியின் நிர்வாகியாக உள்ளார். இதே தெருவில் வசிப்பவர் தவமுனியசாமி. தினகரன் அணியில் இலக்கிய அணி நிர்வாகியாக உள்ளார்.

நேற்று இரவு இவர்கள் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சிலர் மோட்டார் சைக்கிள்களில் அந்த தெருவுக்குள் வந்தனர்.

அவர்கள் தங்கள் கைகளில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வைத்திருந்தனர். அந்த பாட்டிலில் தீ வைத்து கமல் மற்றும் தவமுனியசாமி வீடுகளின் மீது வீசினர்.

பாட்டில் வெடிச்சத்தத்துடன் விழுந்ததால் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் எழுந்து வந்தனர். அவர்களை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீடுகளின் முன்பகுதியில் தீ பிடித்தது. அதனை அங்கிருந்தவர்கள் உடனடியாக அணைத்து விட்டனர்.

நள்ளிரவில் தினகரன் ஆதரவாளர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திறகு ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜேசுவரன், பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ராஜ் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதற்கிடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தினகரன் அணியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இன்று காலை பஜார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் வாரிய தலைவர் சி.முனியசாமி, தினகரன் அணி மாவட்ட செயலாளர் ஆனந்த், முன்னாள் சேர்மன் கவிதா சசிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் முக்தீஸ்வரன் (ராமநாதபுரம்), ஸ்டாலின் ஜெயச்சந்திரன் (மண்டபம்) மற்றும் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.

அவர்கள் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டம் உருவானது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 4 பேர் மோட்டார் சைக்கிள்களில் வருவது பதிவாகி உள்ளது. அவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com