சபாநாயகர் தனி செயலாளரை சட்டசபை செயலாளராக நியமித்ததில் விதி மீறல்- ராமதாஸ்

சபாநாயர் தனபாலின் தனிச் செயலாளரை சட்டசபை செயலாளராக நியமித்ததில் விதி மீறல் நடைபெற்றுள்ளதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தனி செயலாளரை சட்டசபை செயலாளராக நியமித்ததில் விதி மீறல்- ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பேரவைத் தலைவர் தனபாலின் தனிச் செயலாளராக பணியாற்றியவர் என்ற ஒரே காரணத்திற்காக விதிமுறைகளை மீறி அவருக்கு இப்பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவைச் செயலகப்பணி விதிகளை சற்றும் மதிக்காமல் அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த பூபதி பிப்ரவரி 28-ந்தேதி ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு பணி மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவரைத் தான் செயலாளராக நியமித்திருக்க வேண்டும். ஆனால், சம்பந்தமே இல்லாமல் பேரவைத் தலைவரின் தனிச் செயலாளராக பணியாற்றிய சீனிவாசனை பேரவைச் செயலாளர் பதவிக்கு நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தில் நிர்வாகப்பணி, விவாதங்களைத் தொகுக்கும் ஆசிரியர் பணி என இருவகையான பணிப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நிர்வாகப்பிரிவில் உள்ளவர்களை மட்டும் தான் பேரவை செயலாளராக நியமிக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் நிர்வாகப் பிரிவில் கூடுதல் செயலாளராக உள்ள வசந்தமலர் என்பவர் தான் அப்பணிக்கு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரை விடுத்து ஆசிரியர் பணியில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய சீனிவாசனை அப்பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது பேரவை விதிகளையும், மரபுகளையும் மீறிய செயலாகும்.

சட்டப் பேரவைச் செயலர் பதவியை இடமாற்றத்தின் மூலம் நிரப்ப முடியும் என்றும், அதன்படி பேரவைத் தலைவரின் தனிச்செயலராக பணியாற்றிய சீனிவாசனை ஆசிரியர் பணிப் பிரிவிலிருந்து, நிர்வாகப்பணி பிரிவுக்கு மாற்றம் செய்து செயலாளராக நியமித்திருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலக பணி விதிகளின்படி செயலாளர் பதவியை மூன்று வழிகளில் நிரப்ப முடியும். முதலாவதாக பதவி உயர்வின் மூலமும், அடுத்ததாக இடமாற்றத்தின் மூலமும், மூன்றாவதாக நேரடி நியமனத்தின் மூலமும் பேரவைச் செயலாளர் பதவியை நிரப்ப முடியும். எனினும் முதல் வாய்ப்பு இல்லாத நிலையில் தான் அடுத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.

முதல் இரு வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தால் மூன்றாவது வாய்ப்பை பயன்படுத்தலாம். ஆனால், பேரவைச் செயலர் பூபதி ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் நிர்வாகப் பிரிவின் கூடுதல் செயலராக உள்ள வசந்திமலரை நியமிக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகள் உள்ளன. இந்த வாய்ப்பு இருக்கும் போதே இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தி ஆசிரியர் பணிப் பிரிவில் இருந்து பணியாற்றிய சீனிவாசனை நிர்வாகப் பிரிவுக்கு மாற்றி நியமித்தது தவறாகும்.

அதுமட்டுமின்றி, இதற்கு முன் சீனிவாசனை சட்டப் பேரவையின் சிறப்பு செயலாளராக நியமித்ததை எதிர்த்து நிர்வாகப்பிரிவு கூடுதல் செயலர் வசந்திமலர், இணைச் செயலர் சுப்பிரமணியம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பே சீனிவாசனுக்கு அடுத்த பதவி உயர்வு கொடுத்தது தார்மீக அடிப்படையில் தவறு ஆகும். தங்களுக்கு விசுவாசமாக உள்ள ஒருவர் தான் பேரவைச் செயலாளராக வர வேண்டும் என்பதற்காகவே விதிகளை தங்கள் விருப்பம் போல வளைத்து இந்த நியமனத்தை அரசு செய்துள்ளது.

சட்டப்பேரவைச் செயலாளர் பதவி கடந்த 17 ஆண்டுகளாகவே தகுதியுடையவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த ராஜாராமனின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் அவருக்கு மேல் முதன்மை செயலாளர் ஒருவர் விதிகளை மீறி நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு ராஜாராமன், செல்வராஜ், ஜமாலுதீன் ஆகியோருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதால் அவர்களுக்கு அடுத்த படியாக அப்பதவிக்கு வர வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக ஜமாலுதீனுக்கு 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதால் சட்டப்பேரவைச் செயலாளர் பதவிக்கு வந்திருக்க வேண்டிய பலர் அந்தப் பதவியை எட்ட முடியாமலேயே ஓய்வு பெற்றனர். அந்த வகையில் இப்போது தகுதியில்லாத ஒருவருக்கு பேரவைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதால் தகுதியுடைய பலர் பாதிக்கப்படுவார்கள்.

பேரவைத்தலைவர் நேர்மையானவராக இருந்தால் இதை அனுமதிக்கக் கூடாது.

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக சீனிவாசனை நியமித்த ஆணையை ரத்து செய்து விட்டு, அந்தப் பதவிக்கு தகுதியுடையவரை நியமிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் பதவிக்கான தகுதிகள் மற்றும் நியமன முறையை அரசு தெளிவாக வரையறுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com