மதத்தலைவருக்கு தீர்ப்பு வழங்கிய சி.பி.ஐ. நீதிபதிக்கு பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு

கற்பழிப்பு வழக்கில் மதகுரு குர்மீத் ராம் ரகீம்சிங் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஜக்தீப்சிங்குக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்க அரியானா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மதத்தலைவருக்கு தீர்ப்பு வழங்கிய சி.பி.ஐ. நீதிபதிக்கு பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு
Published on

தேராசச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங் மீது கற்பழிப்பு வழக்கு நடந்தது. இந்த வழக்கை விசாரித்த சண்டிகாரின் புறநகர் பகுதியான பஞ்ச் குலாவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அவர் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் நாளை மறுதினம் அறிவிக்கப்பட உள்ளது.

அதை தொடர்ந்து சண்டிகாரில் பதட்டம் ஏற்பட்டது. பஞ்சாப் மற்றும் அரியானாவில் உள்ள அவரது ஏராளமான ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் வெடித்தது.

அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பஞ்ச்குலாவில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு தீவைக்கப்பட்டன.

கலவரத்தில் 32 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். கற்பழிப்பு வழக்கில் மதகுரு குர்மீத் ராம் ரகீம்சிங் குற்றவாளி என சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஜக்தீப்சிங் தீர்ப்பளித்தார். அவருக்கு மத தலைவர் குர்மீத் ராம் சிங் ஆதரவாளர்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே அவருக்கு மிக உயர்மட்ட பாதுகாப்பு வழங்க அரியானா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதி ஐக்தீப் சிங்குக்கு உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அல்லது மத்திய அதிரடிப்படை போலீஸ் பாதுகாப்பு வழங்கலாமா? என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com