ராஜீவ் கொலையாளிகள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
Published on

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்.

இவர்கள், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், தங்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 2011ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கிற்கு கடந்த 2012ம் ஆண்டு தயாரித்த பதில் மனுவை, தமிழக அரசு ஐகோர்ட்டில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. அதில், ‘மனுதாரர்களை விடுதலை செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது.

பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் கேட்டது. அதன்படி, புதிய பதில் மனுவை தமிழக உள்துறை செயலாளர் பெயரில் நேற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

இருவரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு வக்கீல், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உள்ளிட்டோர் தங்களை விடுதலை செய்ய கோரி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை தற்போது விடுதலை செய்ய முடியாது’ என்று கூறினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தமிழக அரசின் கருத்தை பதிவு செய்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது? என்பதை பார்த்து விட்டு, இந்த வழக்கை விசாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும். அதுவரை மனுதாரர்கள் காத்திருக்கவேண்டும்’ என்று கூறி விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com