தி.மு.க.வின் முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் ரஜினி - கமல் பங்கேற்பு

கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 10, 11-ந் தேதி நடைபெறும் தி.மு.க.வின் முரசொலி பவள விழாவில் ரஜினி - கமல் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தி.மு.க.வின் முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் ரஜினி - கமல் பங்கேற்பு
Published on

சென்னை:

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி உள்பட தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், மாதவரம் சுதர்சனம், கே.என்.நேரு, சுரேஷ் ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோருவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு, மேலும் தற்போதைய அரசியல் நிலவரங்கள், கட்சி பணிகள் பற்றியும் விவாதித்தனர்.

முரசொலி 75-ம் ஆண்டு பவள விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் விவாதித்தனர்.

10-ந்தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்கள் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அழைக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை அழைத்துள்ளனர். இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

2-ம் நாள் விழா (11-ந்தேதி) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடக்கிறது. இந்த விழாவில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை அழைத்துள்ளனர். இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஆனால் ரஜினி பார்வையாளராக மட்டுமே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி - கமல் அரசியலுக்கு வருவதாக பேசப்பட்டுவரும் நிலையில் இருவரும் திமுக நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com