

சென்னை:
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை குறைக்க அரசு வழிவகை தேடுவதாக ரகுபதி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
உரிமைக்குழு கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு பெரும்பான்மையை இழந்து மைனாரிட்டியாக ஆகி விட்டது. எனவே தங்களது ஆட்சியை காப்பாற்றி கொள்ளும் நோக்கத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வழிவகைகளை தேடுகிறது. அந்த வகையில், ஜூலை 19-ந் தேதி அன்று நடந்த சம்பவங்களுக்காக அவை உரிமைக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.
இதில், அவை விதி 223-ம் பிரிவின்படி எந்த தவறும் செய்யவில்லை. அந்த பிரிவின்படி விளக்கம் கேட்டுதான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அந்த பிரிவை பயன்படுத்தாமல் உரிமைக்குழு கூடியதே விதி மீறல் என்றும், அது ஜனநாயக விரோத செயல் என்றும் சொல்லி இருக்கிறோம். குட்கா பற்றி ஏற்கனவே நாங்கள் சட்டசபையில் புகார் கூறியுள்ளோம்.
குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் எளிதாக விற்பனை செய்யப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதற்காக மு.க.ஸ்டாலின் அவற்றை சபைக்கு கொண்டு வந்தாரே தவிர, ஜனநாயக விரோத செயலை அவர் செய்யவில்லை. தவறு செய்யாமல் தி.மு.க.வினர் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதாக குழு கூட்டத்தில் தெரிவித்தோம். எதிர்க்கட்சி தலைவர் மீது நடவடிக்கை என்றால், அது ஜனநாயக படுகொலையாகி விடும். எனவே எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூறினோம். எனவே, இந்த பிரச்சினையை மீண்டும் சட்டசபைக்கே அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தோம்.
அன்றுகூட தி.மு.க. உறுப்பினர்களை உட்காருங்கள் என்று தான் சபாநாயகர் சொன்னாரே தவிர நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்லவில்லை. முதல்-அமைச்சர் பேசிய பிறகு நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவிப்பது விதி மீறலாகும்.
குட்கா விவகாரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கத்தான் அப்படி செய்யப்பட்டது. அதன் பிறகு கோடிக்கணக்கான குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.