

சென்னை:
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலியிடங்களை நிரப்பும் நோக்குடன் 1883 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டே தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே நின்றுவிட்டது. உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்பிக்கப்படுவதில்லை. தனியார் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களும், அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களும் அரசு உதவிபெறும் பேராசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ, ஆண்டுக்கு ஒருமுறை நிரப்பப்பட வேண்டிய உதவிப் பேராசிரியர் பணிகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நிரப்புகிறது.
மாணவர்களின் உயர்கல்வி குறித்த இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1883 பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.