ரஷியா வாருங்கள் - டிரம்ப்புக்கு புதின் திடீர் அழைப்பு

இரண்டாம் உலகப்போரின் 75-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்கேற்க ரஷியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
டிரம்ப் புதின்
டிரம்ப் புதின்
Published on

1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை நேச நாடுகள் என்றும் எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒன்று சேர்ந்து போரிட்டன.

சுமார் ஆறாண்டுகள் நீடித்த இந்த இரண்டாம் உலகப்போரின் போது, ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தைத் தாக்க தனது படைகளுக்கு உத்தரவிட்டார் ஜப்பான் ராணுவ தளபதி ஜெனரல் டோஜோ.

யுத்த விதிகளின்படி முறையான முன்கூட்டியே அறிவிப்புச் செய்யாமல் எந்த நாடும் இன்னொரு நாட்டைத் தாக்கக் கூடாது. ஆனால் எச்சரிக்கை செய்தால் அமெரிக்கா உஷார் ஆகிவிடும் என்பதால் எதிர்பாராத திடீர் தாக்குதலை ஜப்பான் விமானப்படைகள் நடத்தின.

7-12-1941 அன்று 350-க்கும் அதிகமான ஜப்பான் போர் விமானங்கள் பயங்கரமான குண்டுகளை வீசி நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்கள், மற்றும் 300-க்கும் மேற்பட்ட போர்விமானங்கள் சேதமடைந்தன.

இதன் எதிரொலியாக ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி நடத்திய தாக்குதல், மனிதர்களால் உண்டாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பேரழிவாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பின்னர் 2.9.1945 அன்று அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்ததை அணுசரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 9-ம் தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றிநாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஒசாகா நகரில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.   

இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவு, சர்வதேச பிரச்சைகள் மற்றும் வர்த்தக ரீதியிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த ஆண்டு மே 9-ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் உலகப்போரின் 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com